குப்பை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

திருக்கனூர், அக். 9: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம், சன்னியாசிகுப்பம் உள்ளிட்ட சில கிராமங்களில் குப்பை கொட்டுவதற்கான இடம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த 5 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கிறது. சமீபத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் ஜெயக்குமார், கடந்த சில வாரங்களாக அந்தந்த பகுதி மக்களிடையே கலந்தாய்வு நடத்தி திருவாண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம், கலிதீர்த்தாள்குப்பம் பேட் போன்ற பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் வளாகத்தில் கிராம மக்களின் ஆலோசனை கூட்டம் ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. அதில் ஊர் முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கருத்துகளின்படி அக்கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பின்புறமுள்ள அரசு புறம்போக்கு இடத்தை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே அந்த இடத்தை அனைவரும் சென்று பார்வையிட்டனர்.

Advertising
Advertising

ஆனால், அப்பகுதி ஓடை புறம்போக்கு என்பதால் புதுவை அரசின் மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் அனுமதி கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் கிராம மக்களின் ஆலோசனைப்படி தற்போது பயன்பாட்டில் உள்ள 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஊர் சுடுகாட்டு பகுதியில் சுமார் 40 சென்ட் இடத்தை நான்குபுறமும் மதில்சுவர் எழுப்பி, ஊருக்கு வெளிப்புறமாக அவ்விடத்திற்கு பாதை அமைத்து பயன்படுத்தி கொள்வதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன் பொக்லைன் மூலம் வெளிப்புற பாதை சரிசெய்யப்பட்டு, மின்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து, இடையூறாக இருந்த மின்பாதைகளை சரிசெய்து, குப்பை கொட்டுவதற்கான இடம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இவ்விடத்தை பயன்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆணையரிடம் மனு கொடுத்துள்ளதால் இப்பணியை மேற்கொண்டு தொடர இயலாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, கலெக்டர் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரண்டு பிரிவுகளாக உள்ள கிராமத்தினரிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கி உடனடியாக பொதுமக்களுக்கு இடையூறு இல்லாதவாறு குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: