மாந்துறையில் 3.25 ஏக்கர் பரப்பளவில் புதிய நீதிமன்ற கட்டிடம் இடத்தை முதன்மைநீதிபதி ஆய்வு

லால்குடி, அக்.1: லால்குடி அருகே மாந்துறை பகுதியில் புதியநீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் கடந்த 2 வருடமாக தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் லால்குடி கிளை நீதி மன்ற கட்டிடம் இயங்கி வந்தது. புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் மாவட்ட கலெக்டர் சிவராசு வழிகாட்டுதலின்படி லால்குடி அருகே மாந்துறை பகுதியில் உள்ள ஆம்ரவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 3.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை நேற்று மாலை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், தலைமை குற்றவியல் நீதிபதி கிருபாகரன் மதுரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது லால்குடி சார்பு நீதிபதி பால்பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுதா, லால்குடி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மோகனப்பிரியா, குற்றவியில் நீதிபதி விஜயசாரதி, லால்குடி தாசில்தார் சத்தியபாலகங்காதரன், கோயில் செயல் அலுவலர் மனோகரன், லால்குடி வக்கீல் சங்க தலைவர் கென்னடி, செயலாளர் சுதாகர், இணை செயலாளர் முத்து, முன்னாள் வக்கீல் சங்க தலைவர்கள் நாகராஜன், மதிவாணன், சண்முகம் உள்பட வக்கீல்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: