வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை, சுருளி அருவிகளில் குளிக்க தடை

பெரியகுளம்,அக்.1: பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் கனமழை காரணமாக நீர் வரத்து இருக்கும். கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில்  அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி அனைத்து பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் அருவி வறண்டு காணப்பட்டது. இதனால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வரத்து குறைவாக இருந்தது.  இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் மாலை மற்றும் இரவுநேரத்தில் பரவலாக பெய்த கனமழையினால்  கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து துவங்கியது.  இந்நிலையில் தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் வருவதாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்  கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  வெள்ளப்பெருக்கு  சீராகும் வரை தடை நீடிக்கும் என்றும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதே போன்று பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வரகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கம்பம்கம்பம் அருகே உள்ள சுருளி அருவி சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள கைலாசநாதர் குகை, பூதநாரயணன் கோயில், ஆதி ஆண்ணாமலையார் கோயில், வேலப்பர் கோயில், சுருளிமலை ஐயப்பன் கோயில், கன்னிமார் கோயில் புகழ் பெற்றவை. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் சுருளிக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.  ஹைவேவிஸ் தூவானம் அணை தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. கடந்த இரு நாட்களாக இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவியில் நேற்று காலை தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடைவிதித்துள்ளனர். இதுகுறித்து கம்பம் கிழக்கு வனத்துறையினர் கூறுகையில்,`` மழையின் காரணமாக அருவிக்கு வந்துகொண்டிருந்த தண்ணீர் அதிகமாக வரத்தொடங்கி உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது. அருவியின் தண்ணீர் வரத்து குறைந்ததும் மீண்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றனர்.

Related Stories: