சங்கத்தலைவர் புகார் மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் டி.என்.ஏ., சோதனை நடத்தும் போலீசார்

தேனி, செப். 25:தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாய் பேச முடியாத, காது கேட்காத ஏழு வயது சிறுமி தேனியில் உள்ள தனியார் நடத்தும் மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி மையத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த விவகாரம் பெரிய அளவில் பிரச்னையை கிளப்பி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு சமூக அமைப்புகளும், கிராம மக்களும் மறியல், முற்றுகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.தேனி மகளிர் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இந்த விசாரணையில் சிறுமி மீதான பாலியல் வன்முறை அவர் படிக்கும் மனநல பயிற்சி மையத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பான சி.சி.டி.வி., கேமரா காட்சி பதிவுகளை சிறுமியின் பெற்றோருக்கும் காண்பித்துள்ளோம். இதில் குற்றவாளியாக கருதப்படும் நபரும் மனநலம் பாதித்த நபராக இருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் உள்ளது. எனவே இந்த விஷயத்தில் குற்றவாளியை உறுதிப்படுத்த டி.என்.ஏ., சோதனை நடந்து வருகிறது. தவிர குற்றவாளி உண்மையில் மனநலம் பாதித்த நபரா என்ற உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. எப்படியும் ஓரிரு நாளில் இப்பிரச்னையில் குற்றவாளியை கைது செய்து விடுவோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: