அய்யம்பாளையம் அம்மன் கோயில் திருவிழா பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

பட்டிவீரன்பட்டி, செப். 24: அய்யம்பாளையத்தில் சின்னமுத்தாலம்மன் கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சி்ன்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி திருவிழா நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தாண்டு இருதரப்பினராக பிரிந்து திருவிழா நடத்துவது என தீர்மானித்திருந்ததாக கூறப்படுககிறது. இதுதொடர்பாக கடந்த ஆக.7ம் தேதி இருதரப்பினரும் கிராமத்தில் ஒன்று கூடி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் முடிவு சொல்வதாக பட்டிவீரன்பட்டி காவல்நிலையத்தில் கூறி சென்றனர். ஆனால் தகவல் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே ஒரு தரப்பினர் வரும் செப்.25ம் தேதி சின்னமுத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள், போலீசார் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க கோயில் திருவிழா நடத்துவது குறித்து செப்.23ல் ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வட்டாட்சியர் அரவிந்த் தலைமையில், பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் குமரசேன், சார்பு ஆய்வாளர் தினேஷ் முன்னிலையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பினரும் ஒன்றிணைந்து கோயில் திருவிழாவை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருவிழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Related Stories: