திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா இன்று துவக்கம்

திசையன்விளை, செப். 20: திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல 135ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (20ம் தேதி) துவங்கி 10 நாட்கள் விமரிசையாக நடக்கிறது. திசையன்விளையில் 135 ஆண்டுகளுக்கு முன்னர் கலைநயத்துடன் கட்டப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட உலக ரட்சகர் ஆலயம் 189 அடி உயரம் கொண்டதாகும். கடந்த ஆண்டு திருத்தலமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில் திருத்தல திருவிழா  கொடியேற்றத்துடன் இன்று (20ம் தேதி) துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 5.45 மணிக்கு ஜெபமாலை பவனியுடன் நடைபெறும் திருப்பலியில் ஸ்டெல்லா மாரீஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிக்கின்றனர்.  அடைக்கலாபுரம் தூய சூசை அறநிலையம் உதவி இயக்குநர் ரூபன் தலைமை வகிக்கிறார்.

மாலை 6.30 மணிக்கு சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கிள் செகதீசு தலைமையில் ஜெபமாலை, கொடியேற்றம், நற்கருணை ஆசீரும், செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் மறையுரையைத் தொடர்ந்து ஸ்டெல்லா மாரீஸ் பள்ளியினரின் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளையொட்டி நாளை அதிகாலை 5.45 மணிக்கு ஜெபமாலை பவனியுடன் திருப்பலி நடக்கிறது. சாத்தான்குளம் உதவி பங்குத்தந்தை கலைச்செல்வன் தலைமையில் நடைபெறும் இத் திருப்பலியில் ஆர்.சி. துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பிக்கின்றனர். மாலை 6.30 மணிக்கு துரைகுடியிருப்பு பங்குத்தந்தை ஜார்ஜ் ஆலிபன் மறையுரையைத் தொடர்ந்து ஆர்.சி துவக்கபள்ளியினரின் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி காலை பல்வேறு அன்பியங்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பிக்கும் திருப்பலி, மாலை கலைநிகழ்ச்சி நடக்கிறது. காலை திருப்பலி, மாலை மறையுரை, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பல்வேறு பங்குகளை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் சிறப்பிக்கின்றனர்.

 ஏற்பாடுகளை பங்குத்தந்தை  ரெமிஜியுஸ் லியோன், பங்கு மேய்ப்பு பணிக்குழு, அருட்சகோதரிகள், அன்பியங்கள், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: