ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க கோரி திருச்சி மண்டல அலுவலகம் முன் அக்.10ம் தேதி மறியல் இயக்கம்

பெரம்பலூர், செப்.15: ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்ககூலி ரூ.380 வழங்க கோரி திருச்சி மண்டல அலுவலகம் முன்பு 10ம்தேதி மறியல் இயக்கம் நடத்துவது என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி மண்டல குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரங்கராஜன் தலைமை வகித்தார். பெரம்பலூர் வட்டார செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் ராஜாராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ. 380 வழங்கிட கோரி மண்டல அளவில் வரும் அக்டோபர் 10ம் தேதி திருச்சி மண்டல அலுவலகம் முன்பு மறியல் இயக்கம் நடத்துவது, மின்சாரம் மக்களின் அடிப்படை உரிமை என்று பிரகடனம் செய்து மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மின் கட்டணம் நிர்ணயம் செய்திடவும், மின் துறையை பொதுத்துறையாக நீடித்து மக்களின் சேவை துறையாக தொடர்ந்திட மண்டல அளவில் மின் நுகர்வோர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கத்தை வரும் நவம்பர் 23-ம் தேதி திருச்சியில் நடத்துவது, புதிய பகுதி நேர துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.

Related Stories: