நாளை துவக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 60 இடங்களில் தூய்மை பணி

நெல்லை,செப்.11:  நெல்லை தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி  நாளை (12ம் தேதி) துவங்கி 14ம் தேதி வரை 60 இடங்களில் நடைபெற உள்ளதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். நெல்லை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தாமிரபணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பேசியதாவது: நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியாக பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கும் தன்பொருநை என்னும் தாமிரபரணி ஆற்றில் 60 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் குடிமராமத்து பணிகளின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளம், கால்வாய், கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளை சீரமைக்கும்பணி பொதுமக்கள் பங்களிப்புடன் போர்கால அடிப்படையில் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நாளை (12ம் தேதி) துவங்கி 13ம் தேதி வரை இருநாட்கள் இயந்திரம் உதவியுடன் மேற்கொள்ளத்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மறுநாள் (14ம் தேதி) தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மூலம் பாபநாசம் அய்யா கோயில் முதல் சீவலப்பேரி வரை 60 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இப்பணியினை சிறப்பாக செயல்படுத்த நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து தேவையான ஏற்பாடுகளும் செய்து தரப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இப்பணியினை சிறப்பாக செயல்படுத்திட அனைத்து ஆலோசனைகளும் சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் துறை அலுவலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்று இதை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் டிஆர்ஓ முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ஆகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: