ஊட்டச்சத்து குறித்து பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

திருத்தணி, செப். 11: திருத்தணியில் ஊட்டச்சத்து உணவு குறித்து பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருத்தணியில் உள்ள அனைத்து அரசினர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் போஷன் அபியான் திட்டம் மூலம், கடந்த, 6ம் தேதி முதல் வரும் 23ம் தேதி வரை, எடை உறுதி செய்தல், ரத்த சோகை பரிசோதனை முகாம், உணவுத் திருவிழா, முளைப்பாரி விதைகள் வழங்குதல், பேச்சு, ஒவியம், கட்டுரை போட்டிகள், பேரணி, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தல், மரக்கன்றுகள் நடுதல், சிறிய நாடகங்கள் நடத்துதல், மாணவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் போல் உடைகள் அணியச் செய்தல் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய ஒளி படுமாறு விளையாட செய்தல் போன்றவை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அந்த வகையில், திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் சுமதி துவக்கி வைத்தார்.இதில், மாணவர்கள் இயற்கை உணவுகள், தூய்மை, மட்கும் குப்பை, மட்காத குப்பை, ஊட்டசத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் குறித்து விளம்பர பதாகைகள் கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், ஒரு மாணவர் காய்கறிகளால் உடை அணிந்து ரத்தசோகை விரட்டுவதற்கு தேவையான காய்கறிகள் என உணர்த்தும் வகையில் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: