சர்வர் இணைப்பில் கோளாறு கோவை வட்டார போக்குவரத்து அலுவலக பணிகள் முடக்கம்

கோவை, செப்.10:கோவை மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நேற்று சர்வர் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோவை மண்டல போக்குவரத்து துறையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கோவை தெற்கு, வடக்கு, சென்ட்ரல், மேற்கு, திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், பொள்ளாச்சி, ஊட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், சூலூர், அவினாசி, காங்கயம், வால்பாறை, மேட்டுப்பாளையம், கூடலூர், உடுமலை ஆகிய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்களில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழகுனர் உரிமம் பெறவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம், புதிய வாகன பதிவு, எப்.சி உள்ளிட்டவைகளுக்காக வருகின்றனர். இவை முற்றிலும் ஆன்லைன் முறையில் உள்ள நிலையில் சமீபகாலமாக சர்வர் கிடைப்பதில் கோளாறு ஏற்பட்டு வருகிறது.  இந்நிலையில், கோவையில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 12.30 வரை சர்வர் இணைப்பில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அலுவலக பணிகள் முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த, 2005 முதல், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் கம்ப்யூட்டர் மயமாகின. தற்போது புதிய வெர்சனாக மாற்றப்படுகிறது. இதற்காக மெயின் சர்வரில், டேட்டா விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. மெயின் சர்வர் வேகம் குறைவதால் இணைப்பும் கிடைப்பதில்லை. இப்பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. சர்வர் பிரச்னையால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது,’’ என்றார்.

Related Stories: