ஓய்வூதிய திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை, ஆக. 22:மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், விவசாயி கவுரவ ஊக்குவிப்பு திட்டம் போன்ற வரிசையில், ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுவரையுள்ள விவசாயிகள் சேரலாம். 60 வயது அடைந்தவுடன் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும். மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை வயதுக்கு ஏற்ப சந்தா செலுத்தலாம். இதற்கு சமமான தொகையை மத்திய அரசு செலுத்தும். இத்திட்ட காலத்துக்கு முன் சந்தா தாரர் இறந்துவிட்டால், அவருக்கு மனைவி இல்லாதபட்சத்தில், கட்டிய தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு கிடைக்கும். மனைவி அல்லது வாரிசுதாரர்களுக்கு திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதவீதம், அதாவது மாதம் ரூ.1500 வீதம் அவரின் இறுதிக்காலம் வரை கிடைக்கும்.

ஏற்கனவே பிஎம்-கிசான் திட்டத்தில் இணைந்துள்ள சந்தாதாரர்கள் அத்திட்டத்தின் வங்கி கணக்கு வாயிலாக இந்த ஓய்வூதிய திட்ட தவணையையும் செலுத்தலாம். எல்.ஐ.சி., நிறுவனம் ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. மத்திய அரசின் சி.எஸ்.சி., பொது சேவை மையத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம். இதில் சேர மடத்துக்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: