வாக்கிங் சென்றவரிடம் செயின் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

அம்பை, ஆக. 22: அம்பையில் வாக்கிங் சென்றவரிடம் செயினை பறித்து சென்ற இருவருக்கு அம்பை சார்பு நீதிமன்றம் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது.

அம்பை அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (51), வாடகை வாகன உரிமையாளர். கடந்த 2016 மார்ச் 25ம் தேதி வழக்கம்போல் இவர், அம்பை - தென்காசி சாலையில் நடைபயிற்சி சென்றார். அப்போது பைக்கில் வந்த இருவர், அரிவாளை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 50 கிராம் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்கு பதிந்து நெல்லை பேட்டையை சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் பாஸ்கர் (30), வைகுண்டம் அருகே உள்ள வெல்லூர் முத்துப்பாண்டி மகன் சிவா என்ற சிவராமன் ஆகியோரை கைது செய்தனர். நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை, அம்பை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோமதிசங்கர் ஆஜரானார்.

Related Stories: