கொடைக்கானலில் பூண்டு சந்தை அமைக்க அரசிற்கு பரிந்துரை

கொடைக்கானல், ஆக. 14:கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு பெறப்பட்டதையடுத்து அதை சந்தைப்படுத்துவதற்கான விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்ற செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ‘கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு புவிசார் குறியீடு பெற்று தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. இதுபற்றி முழுமையாக ஆய்வு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகளவில் இந்த பூண்டின் விற்பனையை கொண்டு செல்வதற்கும், ஒவ்வொரு விமான நிலையங்களிலும் இதனை விற்பனை செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு பெற்ற இப்பூண்டை சந்தைப்படுத்துவதற்கு உரிய வணிக முத்திரை, அதற்கான காப்புரிமை பெறப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் பூண்டு சந்தை அமைப்பதற்கான பரிந்துரை அரசுக்கு செய்யப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக கூட்டத்திற்கு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறை தலைவர் டாக்டர் உஷா ராஜநந்தினி முன்னிலை வகிக்க, பூண்டு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>