மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பூர், ஆக. 14: திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் மாற்றுத்திறன் கொண்ட பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் தனித்தனி கால அட்டவணைப்படி நடக்கிறது.இம்மருத்துவ, முகாமில் கண் மருத்துவர், காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர், முட நீக்கியல் மருத்துவர், உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், அண்ணப் பிளவு மற்றும் உதட்டுப் பிளவு அறுவை சிகிச்சைக்கு ஸ்மைல் ட்ரைன் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் அறுவை சிகிச்சை பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. மருத்துவ முகாமில் கண்டறியப்படவுள்ள அறுவை சிகிச்சை தேவையான மாணவர்களுக்கு அரசு மருத்துவமனை மூலமாகவும், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலமாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த மருத்துவ முகாமானது இன்று(14ம் தேதி) ஊத்துக்குளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், 16ம் தேதி பெதப்பம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், 20ம் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம்,  21ம் தேதி மடத்துக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், 22ம் தேதி பொங்கலூர் பி.யு.வி.என்.தொடக்கப்பள்ளி, 27ம் தேதி அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 28ம் தேதி வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், 29ம் தேதி உடுமலைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடக்கிறது.இதனை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளது. மேலும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையானது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்படவுள்ளது.

Related Stories: