வள்ளியூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி ஞானதிரவியம் எம்பி ஆய்வு

வள்ளியூர், ஆக. 14: வள்ளியூரில் மந்தகதியில் நடைபெற்று வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஞானதிரவியம் எம்பி, இதை துரிதப்படுத்துவதோடு, தற்காலிக மாற்றுப்பாதையை உடனடியாக அமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக வள்ளியூர் திகழ்கிறது. ெநல்லை- நாகர்கோவில் சாலையில் உள்ள வள்ளியூரில் இருந்து கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி, சாத்தான்குளம், திசையின்விளை, இட்டமொழி, குலசேகரப்பட்டினம், உவரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வள்ளியூர் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கிராசிங்கை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. ரயில்கள் வருகையின்போது போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்ட மக்கள் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2017 ஜூன் மாதம் இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கியபோதும் மந்தகதியிலேயே நடந்துவருவதால் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து பொதுப்பணித்துறையால் தற்காலிகமாக தரமற்று அமைக்கப்பட்ட தார்சாலை ஒரு சில நாட்களிலேயே சேதமடைந்து உருக்குலைந்தது.

Advertising
Advertising

இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடப்பது தொடர்கதையானது. இதையடுத்து மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்த இச்சாலையும் தற்போது தொடர்ந்து பெய்த மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. மேலும் அதில் தண்ணீர் தேஙகியதால் போக்குவரத்து கேள்விக்குறியானது. இவ்வாறு மாற்றுப்பாதையும் இல்லாமல் அவதிப்படும் மக்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதனிடையே மந்தகதியில் நடந்துவரும் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ஞானதிரவியம் எம்பி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில்வே சுரங்கப்பாதை பணியால் அவதிப்படும் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நடவடிக்கை கோரி மனுக்கள் அளித்தனர்.

பின்னர் அவர் கூறுகையில், ‘‘மந்தகதியில் நடைபெறும் ரயில்வே சுரங்கப்பாதையை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை தற்காலிக உடனடியாக மாற்றுப்பாதை அமைக்க எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களைத் திரட்டி திமுக சார்பில் தொடர் போாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.

Related Stories: