பெரியாறு நீர்பிடிப்பில் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து நீர்மட்டம் உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, ஜூலை 23:  முல்லைப்பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், திறக்கப்பட்ட தண்ணீரால் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து வரத்துவங்கி உள்ளது. இதனால் வைகையின் நீர்மட்டம்  உயர்ந்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 5 மாவட்ட மக்களின் குடிநீர் வாழ்வாதாரமாக விளங்குகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவு கோடை மழையும், தென்மேற்குப் பருவமழையும் பெய்யாததால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் 71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் மூன்றில் ஒரு பகுதிக்கு குறையத் தொடங்கியது. மேலும் வைகை ஆறு வறண்டதால் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வந்த பல லட்சம் லிட்டர் குடிநீரும் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 1273  நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 300 கனஅடி திறக்கப்பட்டு வைகை அனையின் நீர் தேக்கப் பகுதிக்கு வினாடிக்கு 144 கனஅடியாக வந்தடைகிறது. இதனால்  அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து, 28.12 அடியாக உள்ளது. இதனால் வைகை கூட்டு குடிநீர் திட்டம் மீண்டும் செயல்படுவதால்  பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வைகை அணையின் நேற்றைய காலை 6 மணி நிலவரப்படி  நீர்மட்டம் 28.12 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 144 கன அடியாகவும், மதுரை,  ஆண்டிபட்டி - சேடப்பட்டி,தேனி பெரியகுளம், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதி  மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 60 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: