பழைய பஸ் நிலையத்தில் இருக்கை வசதியின்றி பயணிகள் அவதி

திருப்பூர்,ஜூலை23: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர போதிய இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வசித்து வரும் திருப்பூரில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ள பகுதியாக திருப்பூர் பழைய பஸ் நிலையம் உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் சென்னை, ஈரோடு, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் அவிநாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் தினசரி நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றன.இதன் காரணமாக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களிலிருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து வெளியூர்களுக்கும் செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் காத்திருக்கின்ற நிலை ஏற்படுகிறது. அப்போது அவர்கள் அமர்வதற்காக பஸ் நிலையத்தில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. குறைந்த அளவே இருக்கைகள் போடப்பட்டுள்ள நிலையில், அதிலும் பாதிக்கும் மேற்பட்டவை உடைந்து பயன்படுத்த தகுதியற்றதாக உள்ளது. இதனால் பயணிகள் பலர் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நல்ல நிலையில் இருக்கும் இருக்கைகளை சுற்றி ஆக்கிரமித்து பழக்கடைகள் மற்றும் வாட்ச் கடைகளை போட்டுள்ளனர். இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆகவே பழுதடைந்த இருக்கைகளை சரி செய்வதோடு, கூடுதலாக இருக்கைகளை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: