பணி நிரந்தரம் செய்யக் கோரி பொதுப்பணித் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம், ஜூலை 19: கல்பாக்கம் அருகே, பொதுப்பணி துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அடுத்த பனங்காட்டுச்சேரி கிராமத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் கல்பாக்கம் நீரேற்று நிலையம் செயல்படுகிறது. இங்கு கடந்த 2005ம் ஆண்டு முதல் 47 பேர் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், நீரேற்று நிலைய ஊழியர்கள், நேற்று காலை நீரேற்று நிலையம் முன்பு திரண்டனர். அங்கு தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சென்னை பொதுப்பணித் துறை நில நீர் கோட்ட செயற்பொறியாளர் மற்றும் சதுரங்கப்பட்டினம் எஸ் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தங்களை பணி நிரந்தரம் செய்வதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் ஊழியர்கள் கூறினர். அதற்கு, உயர் அதிகாரிகளிடம் பேசி 10 நாட்களில் பணி நிரந்தரம் செய்வதற்கு பரிந்துரை செய்வோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை ஊழியர்கள் கூறுகையில், நீரேற்று நிலையத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக தினக்கூலி தொழிலாளர்களாக நாங்கள் வேலை பார்க்கிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எவ்வதி நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்யாமல் பொதுப்பணித் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். தற்போது பணி நிரந்தரம் செய்ய வழி வகை செய்யப்படும் என அதிகாரிகள் 10 நாள் அவகாசம் கேட்டுள்ளனர். 10 நாட்கள் கடந்தும் அதிகாரிகள் மெத்தனமாக இருந்தால் பெரிய அளவில் வலுவான தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர். படவிளக்கம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கல்பாக்கம் நீரேற்று நிலைய ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Stories: