சட்டப்படியான ஓய்வூதியம் ரூ.3,500 வழங்ககோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஜூலை 19: பொன்னமராவதி - வலையபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் ரூ.3,500 வழங்ககோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பொன்னமராவதி - வலையபட்டியில் உள்ள ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில், அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும். மத்தியஅரசு வழங்கும் ரூபாய் 1500, 750 ஐ உடனே வழங்க வேண்டும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாண்டிச்சேரி பயிற்சி கொடுத்து இடைநிலை ஆசிரியருக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பிறத்துறை பணிகளை அங்கன்வாடி பணியாளர்களை பார்க்கச்சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது, சட்டப்படியான ஓய்வூதியம் ரூ 3,500 ஐ வழங்க வேண்டும், ஏழாவது ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பொன்னமராவதி வட்டாரப் பகுதியில் உள்ள 119 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் 144 பேர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் மூலமாக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. பொன்னமராவதி வட்டார தலைவி பி.சந்திரா தலைமை வகித்தார். துணைத்தலைவர் செல்வம், செயலாளர் முத்துலெட்சுமி, துணை செயலாளர் சகுந்தலா ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories: