கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் தண்ணீரால் கிட்னி பாதிப்பா? கலெக்டரிடம் புகாரால் பரபரப்பு

கந்தர்வகோட்டை, ஜூலை 18: கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி பகுதியில் தண்ணீரால் கிட்னி பாதிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் மக்களிடம் ரத்தம் சோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

தச்சங்குறிச்சி பகுதியில் மோசமான தண்ணீர் காரணமாக பலர் கிட்னி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கின்றனர். இதன் காரணமாக சிலர் இறந்துள்ளனர். எனவே தக்க நடவடிக்கை எடுத்து தங்களை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனுகொடுத்திருந்தனர்.

இதை தொடர்ந்து நேற்று அப்பகுதி மக்களிடம் ரத்தம் சோதனைக்காக சேகரிக்கும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 184 பேருக்கு மேல் ரத்தம் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இணை இயக்குநர் சந்திரசேகரன், குடும்ப நல இயக்குநர் மலர்விழி, கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமையிடத்து மருத்துவர் ராதிகா புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மக்களிடம் பெறப்பட்ட மாதிரி ரத்தங்களை சோதனை செய்த பிறகு முழுமையான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடத்த உள்ளனர். அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக நேற்று ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. மாதிரி ரத்தத்தை சோதனை செய்த பிறகே எவ்வகையான நடவடிக்கை மேற்கொள்வது என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தண்ணீரால் கிட்னி பாதிக்கப்படுவதாக தச்சங்குறிச்சி மக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: