திருத்தணி அருகே காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல்: வாகன போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி, ஜூலை 18: திருத்தணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சிக்குட்பட்டது காசிநாதபுரம் காலனி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம்  குழாய் மூலம் குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால், கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் செய்தும் சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மாலை காலி குடங்களுடன் திருத்தணி, நாகலாபுரம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்கு வரத்து தடை பட்டது.  தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: