வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வர வழியில்லை திருமங்கலத்தில் ஆசிரியர்கள் அவதி

திருமங்கலம், ஜூலை 16: திருமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வர சரிவர பாதையில்லாததால் ஆசிரியர்கள், பணியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள 103 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வட்டார கல்வி அலுவலகம் அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ளது. கடந்தாண்டு முதல் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமங்கலம் மாவட்ட கல்வி அலுவலகம் செயல்பட துவங்கியது. தற்போது ஒரே வளாகத்திற்குள் 2 கல்வி அலுவலங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முன்புற பகுதியில் அமைக்கப்பட்ட சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் அரசு பள்ளி, வட்டார கல்வி அலுவலகம் அனைத்தும் ‘கிடுகிடு’ பள்ளத்திற்கு சென்றுவிட்டது.

Advertising
Advertising

இதனால் மழைக்காலங்களில் ஆசிரியர்கள் சம்பள கணக்கு பதிவேடுகள், ஆவணங்களை பராமரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது மேலும் வட்டார கல்வி அலுவலகம் சென்று வர சரிவர பாதையில்லாமல் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர இரவு வேளைகளில் சமூகவிரோதிகள் மது அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி எறிந்து சென்றுவிடுகின்றன. மேலும் சிலர் கட்டிடத்தின் அருகே அடிக்கடி குப்பைகளை தீவைத்து எரிப்பதும், அசுத்தம் செய்தும் விடுகின்றனர். இதனால் காலையில் அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள், ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பள்ளம் மற்றும் பாதையில்லாமல் இருக்கும் திருமங்கலம் வட்டார கல்வி அலுவலக கட்டிடத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

Related Stories: