ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணி வழங்க வேண்டும் மேசியாபுரம் மக்கள் மனு

நெல்லை, ஜூலை 16:  ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணிகளை வழங்கிட கோரி மேசியாபுரம் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

வன்னிகோனேந்தல் அருகே மேசியாபுரம் மக்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டைகளை கையில் ஏந்தி வந்து கலெக்டரிடம் அளித்த மனு: மேசியாபுரத்தை சேர்ந்த எங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக பணிகள் வழங்கப்படுவதில்லை. ஆண்டிற்கு நூறு நாட்கள் கூட பணிகள் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேலை பார்த்த நாட்களுக்கு ரூ.180 ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால் வெறும் ரூ.90 மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே முறைகேடுகளை களைந்து பணிகளை முறையாக வழங்கிட வேண்டும்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதபற்பநல்லூர் அருகே சிறுக்கன்குறிச்சி பகுதி மக்கள் நேற்று திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: புதியதாக வீடு கட்டி வரும் நாங்கள் கடந்த 10ம் தேதி நெல்லை தாசில்தார் அலுவலகத்தில் முறையாக மண் அள்ள அனுமதி பெற்று டிராக்டரை கொண்டு காங்கையன்குளத்தில் மண் அள்ளினோம். அப்போது அங்கு வந்த சீதபற்பநல்லூர் போலீசார் மப்டியில் வந்து எங்களுக்கு பணம் அளிக்காமல் மண் அள்ளக்கூடாது என எங்களை மறித்துவிட்டனர்.

மேலும் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவோம் என மிரட்டி வருகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ளே புகுந்து கதவை உடைத்ததோடு டிவியை உடைத்து தள்ளிவிட்டனர். நாங்கள் கொண்டு சென்ற டிராக்டர், வாடகை வண்டிகளை காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே காவல்துறையிடம் இருந்து எங்களை காப்பாற்றி, வீடு கட்ட முறையாக மணல் அள்ள வழிவகை செய்து தருமாறு கேட்டு கொள்கிறோம்.’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிகோனேந்தல் அருகே மேசியாபுரம்மக்கள் தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் முறையாக பணி வழங்க கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

Related Stories: