நாராயணசுவாமி கோயில் ேதரோட்டம்

களக்காடு, ஜூலை 16:  களக்காடு  அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமைவாய்ந்த மன் நாராயணசுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இந்த கோயிலில் ஆனி மாதத்தில் தேரோட்டத் திருவிழா, 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி நடப்பாண்டு திருவிழா, கடந்த 5ம் தேதி திருக்கொடியேற்றத்துடன்  தொடங்கி நடந்து வந்தது.  தினமும் அய்யா நாராயணசுவாமி பல்வேறு  வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அய்யாவழி இன்னிசை கச்சேரி  உள்ளிட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன.

8ம் நாளன்று அய்யா  நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டையாடினார்.  முக்கிய  நிகழ்ச்சியான தேரோட்ட விழா, 11ம் திருநாளான நேற்று கோலாகலத்துடன் நடந்தது.  இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச  பணிவிடைகளும் நடத்தப்பட்டது.  தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி  திருத்தேருக்கு எழுந்தருளினார். அதன்பின் திருத்தேர் வடம் பிடித்து  இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி  முழக்கங்களுடன் உற்சாகத்துடன் தேர் இழுத்தனர். ரத வீதிகளில் பக்தர்கள்  நீண்ட வரிசையில் நின்று அய்யா நாராயணசுவாமிக்கு சுருள் வைத்து வழிபட்டனர்.  தேரின் முன்பு சிறுமிகள் கோலாட்டம் ஆடியவாறு சென்றனர்.

விழாவை முன்னிட்டு  திருத்தேர் பலவண்ண துணிகளாலும், பூக்களாலும் கண்களை கவரும் வகையில்  அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. ரதவீதிகளை சுற்றி வந்து தேர் நிலைக்கு  வந்தது. அதனைத்தொடர்ந்து அய்யா நாராயணசுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி  திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. ஏற்பாடுகளை கோயில்  தர்மகர்த்தா ராஜகோபால் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: