துப்புரவு பணியாளர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகைபதிவு தொடக்கம் முறைகேடு புகாரால் நெல்லை மாநகராட்சி அதிரடி

நெல்லை, ஜூலை 11:  நெல்லை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்வதற்கு மாதிரி பதிவுகள் நேற்று தொடங்கின. இத்திட்டத்தை இவ்வார இறுதிக்குள் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.நெல்லை மாநகராட்சியில் உள்ள தச்சநல்லூர், மேலப்பாளையம், நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 4 மண்டலங்களிலும் சுமார் 1100 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் 600க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி சம்பளம் பெற்று வருகின்றனர். இவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் பணிக்கு வந்து ஊதியம் பெறுவது வழக்கம்.இந்நிலையில் நெல்லை மாநகராட்சி துப்புரவு பணிகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதில் மெத்தனம் உள்ளிட்ட காரணங்களால் ஒட்டுமொத்த மேஸ்திரிகளும் ஒரு மாதத்திற்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து துப்புரவு பணிகளில் நடந்த முறைகேடுகளும் அம்பலமாகின. குறிப்பாக பேட்டை பகுதியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வராத நிலையில், அவர்கள் பெயரில் போலியாக வருகை பதிவு செய்து, ஏடிஎம்மை பயன்படுத்தி லட்சக்கணக்கில் சம்பள பணத்தை சுருட்டியது தெரிய வந்தது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்களின் வருகை பதிவுகளை கண்காணிக்கவும், அவர்களுக்கு பதிலாக அதிகாரிகள் கையெழுத்திடுவதை தவிர்க்கவும் பயோ மெட்ரிக் முறை இவ்வாரத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரி உத்தரவின் பேரில், வருகை பதிவேட்டில் துப்புரவு பணியாளர்கள் கையெழுத்து போடும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி அனைத்து மண்டல அலுவலகங்களிலும், துப்புரவு அலகு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளன. மேலப்பாளையம் மண்டலத்தில் நேற்று மாதிரி ரேகை பதிவுகளை துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டனர். அனைவரின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டவுடன், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வரும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.பெருமாள்புரம் அலகு அலுவலகத்திலும் நேற்று காலை 6 மணி தொடங்கி துப்புரவு பணியாளர்கள் தங்கள் கைரேகைகளை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 8 மணி வரை பலர் களப்பணிக்கு செல்லவில்லை.பணியாளர்கள் போராட்டம்தச்சநல்லூர் மண்டலத்தில் நேற்று சுமார் 120 துப்புரவு பணியாளர்கள் காலை 6 மணிக்கு பணிக்கு வந்த நிலையில், விடுமுறை முடிந்து வந்த ஒரு பணியாளரை சுகாதார அதிகாரி வேலைக்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துப்புரவு பணியாளர்கள் 7 மணி வரை பணிக்கு செல்லாமல், மண்டல அலுவலக வளாகத்திலே போராட்டம் நடத்தினர். பின்னர் அவரை பணிக்கு சேர்த்த பின்னர் அனைவரும் வார்டுகளுக்கு குப்பைகளை அள்ள கலைந்து சென்றனர்.

Related Stories: