நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் வீதி உலா

நெல்லை,ஜூலை 11:  நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா 5வது நாளான நேற்று இரவு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடந்து வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் வரும் 14ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள்ளாக நடக்கிறது. ஆனிப்ெபருந்திருவிழாவின் 5வது நாளான நேற்று காலை சுவாமி, அம்பாள் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் இந்திர விமானத்தில் வீதி உலா நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு சிவாஞ்சலி நாட்டியபள்ளி மாணவியரின் பரதநாட்டியமும், மாலை 5 மணிக்கு சென்னை வனமாளிகா ஜானகி பாலசந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசையும், மாலை 6 மணிக்கு மயிலாடுதுறை கணநாதர் பொம்மை நாடக சபாவின் பெம்மலாட்டம், இரவு 8 மணிக்கு கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

ஆகம விதிமீறல்ஆனித்திருவிழா 5ம் நாள் விழாவிலும், பரிவேட்டை முடிந்த அன்றும் ஊடல் திருவிழா நடத்துது வழக்கம். ஊடல் திருவிழாவின் போது சுவாமி நெல்லையப்பர் முன் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருள்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கண்ணப்பநாயனார் பல்லக்கில் எழுந்தருளச்செய்கின்றனர். இது ஆகம விதிகளுக்கு எதிரானதாகும் என பக்தர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கோயில் நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடல் திருவிழாவின் போது சுவாமி நெல்லையப்பர் முன்பாக கண்ணப்ப நாயனார் தான் எழுந்தருள்வது வழக்கமாக உள்ளது. இதில் ஆகம விதிமுறை மீறல் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது. ஆனிப்பெருந்திருவிழாவில் இன்று

அதிகாலை 5.30 மணி நடை திறப்பு, காலை 6.30 மணி திருவனந்தல், 7.30 மணி விளாபூஜை, காலை 9 மணி காலசாந்தி, நண்பகல் 1.30 மணி உச்சிகால பூஜை, மதியம் 2.30 மணி நடை அடைப்பு, மாலை 4 மணி நடை திறப்பு, சாயரட்சை மாலை 5 மணி, அர்த்தசாம பூஜை இரவு 10.30 மணி, பள்ளியறை பூஜை இரவு 11 மணி ( திருவிழா கால நேரத்திற்கானது).

 நெல்லையப்பர் கோயில் ஆனித் பெருந்திருவிழாவில் 6ம் நாளான இன்று காலை 8.30 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா, மாலை 4 மணிக்கு முருக இளங்கோவின் சிவன் அருள் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு, மாலை 5 மணி நிருத்தியாஞ்சலி பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், மாலை 6 மணிக்கு நவ்வீ மன்ற நாவலர் பாமணி குழுவினரின் சுழலும் சொல்அரங்கம், இரவு 7 மணி தாமிரசபை நாட்டிய பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம், இரவு 8 மணி ராஜேஷ் வைத்யா மற்றும் குழுவினரின் வீணை இசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

நெல்லை பெட்ரோல் நிறுவன கிடங்கு அருகே திடீர் தீவிபத்துநெல்லை, ஜூலை 11:  நெல்லை தச்சநல்லூர் ரயில்வே கேட் அருகில் இந்தியன் ஆயில் நிறுவன கிடங்கு அமைந்துள்ளது. ரயில்வே வேகன்களில் கொண்டு வரப்படும் எரிபொருள் இங்குள்ள ராட்சத டேங்கர்களில் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் விநியோகம் செய்யப்படுவது வழக்கம்.  இந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே எண்ணெய் நிறுவனத்தை சுற்றி அமைந்துள்ள வயல்களில் அறுவடை முடிந்து காய்ந்த புற்களில் நேற்று யாரோ சிலர் தீ வைத்துள்ளனர். காற்று காரணமாக தீ மளமளவென வேகமாக பரவியது. அருகில் எண்ெணய் நிறுவனம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு கருதி உடனடியாக பேட்டை மற்றும் பாளை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி அலுவலர் செல்வகணேஷ் மற்றும் பாளை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று வயல்காட்டில் பரவிய தீயை அணைத்தனர். இதனால் பெரிய தீவிபத்து நிகழாமல் தடுக்கப்பட்டது.

Related Stories: