குடிநீர் வசதி இல்லாததால் அரசு பள்ளியில் குறையும் மாணவர் எண்ணிக்கை ஆண்டிபட்டி அருகே அவலம்

ஆண்டிபட்டி, ஜூன் 25:   ஆண்டிபட்டி அருகே  ராஜதானி ஊராட்சியில் சுந்தரராஜபுரம் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு 6 ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வருகின்றனர். ஆனால் இந்த பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் குடிப்பதற்காக வீட்டிலிருந்தே பாட்டில்களில் தண்ணீர் கொண்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மாணவர்களுக்கு பள்ளியில் இயற்கை உபாதைகள் வந்தால் வீடுகளுக்கு வந்து செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும் மதிய சாப்பாடு தயார் செய்ய தண்ணீருக்கு விவசாய நிலங்களை தேடி அலைந்து தண்ணீரை கொண்டு வரும் சூழ்நிலையில் உள்ளனர். இதனால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின்  எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

மேலும் பள்ளியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்களின் பெற்றோர்கள்  மாற்றுப் பள்ளிக்கு மாணவர்களை சேர்ப்பதற்கு முயற்சி செய்வதாகவும், பள்ளி வளாகத்தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்திற்கும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பச்சிளம் குழந்தைகளும் மிகவும் சிரமம் அடைந்து வருவதாக பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்கு குடிநீர் அறவே இல்லை. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் இன்று, நாளை என்று கூறி வருடங்களை கடத்தி விட்டனர். ஆனால் நாள்தோறும் குடிப்பதற்கு தண்ணீரை தேடி, மாணவர்கள் விவசாய நிலங்களில் அலைகின்றனர். இதனால் அசம்பாவிதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாணவர்களின் தண்ணீர் தேவைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவா நிலையத்தில் உள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனாலும் அரசு பள்ளிக்கு ஆழ்துளைக்கிணறு அமைத்து குடிநீர் வழங்க முன்வரவில்லை. இதனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாற்றுப் பள்ளிக்கு படிப்பதற்காக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில பெற்றோர்கள் இதற்கு என்ன தீர்வு என்பது தெரியாமல் தவித்து வருவதாகவும், மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.

Related Stories: