என்ன ஆனார்... எங்கே இருக்கிறார்? ராணுவத்திற்கு சென்ற மகனை 13 வருடமாக தேடும் பெற்றோர் மோடி வரை முறையிட்டும் முறையான பதில் இல்லை

உத்தமபாளையம், ஜூன் 21:  இந்திய ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்த தனது மகனை 13 வருடமாக காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தாருங்கள் என அவரது பெற்றோர் தேனி கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பெருமாள்(70). இவரது மனைவி ராஜம்மாள்(65). இவர்களது மகன் ராமசாமி(28), இவர் கடந்த 1996ம் இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். பல மாநிலங்களில் பயிற்சி மற்றும் பல்வேறு மாநிலங்களில் பணிகளை முடித்தபின்பு கடைசியாக ஜம்மு - காஷ்மீரில் பணியில் ஈடுபட்டு உள்ளார். அங்கும் பணிகளை  முடித்தபின்பு கடைசியாக  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லாவில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அங்கு பணியை முடித்துவிட்டு இந்திய ராணுவ அதிகாரிகளால், பஞ்சாப் மாநிலத்தில் உளள பாரிகட் என்ற ஊர்க்கு செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடைசியாக 2006ம் வருடம் மார்ச் மாதம் அங்கு இருந்து சென்றவர் 1 வாரத்தில் பஞ்சாப்பில் பணியில் சேரவேண்டும். செல்போன் தொழில்நுட்பம் இல்லாத நிலையில் யாரிடமும் அப்போது தொடர்பில் இல்லை. இதேபோல் குடும்பத்தினரிடமும் தொடர்பில் இல்லை. இந்நிலையில் மகன் ராமசாமி அடிக்கடி பண்ணைப்புரத்தில் உள்ள தமது குடும்பத்தினருடன் பேசுவது கிடையாது. இதனால் சந்தேகம் அடைந்த இவரது தாய் ராஜம்மாள் தனது மகன் நிலை பற்றியும், தொடர்பில் இல்லாததது பற்றியும் கடைசியாக வேலை பார்த்த ஜம்மு - காஷ்மீர் ராணுவமுகாமிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால், முறையான பதில் வரவில்லை. விடுமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து தனது மகனின் நிலை என்ன என்பது குறித்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என்று கூறினர். இதனிடையே கடந்த 2018ம் வருடம் தேனி எஸ்.பி. பாஸ்கரனிடம் தனது மகனை பற்றிய தகவல்களை தெரிவிக்குமாறும், காணாமல்போன ராமசாமியை கண்டுபிடித்து தருமாறும் தந்த மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் 13 வருடமாக ராணுவத்தில் இருந்து பஞ்சாப்பிற்கு சென்ற ராமசாமி தொடர்பில் இல்லை என்றும், போலீசாரே தெரிவித்துள்ளனர். இதன் நகலையும், இந்திய ராணுவத்திற்கு இவரது பெற்றோர்கள் அனுப்பி உள்ளனர். எனவே, தனது மகனின் தற்போதைய நிலை என்ன எங்கே இருக்கிறார். என்ன ஆனார் என தெரியாமலேயே இவரது பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.

 இவரது தாயார் ராஜம்மாள் கூறுகையில், `` எனது மகன் ராமசாமி 13 வருடமாக எங்கே இருக்கிறார். என்ன செய்கிறார். ராணுவத்தில் உள்ளாரா என்பது கூட தெரியவில்லை. நாங்களும்  பிரதமர் மோடி வரை எங்களது கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டோம். கடைசியாக தேனி கலெக்டரிடம் எங்களது நிலை பற்றியும், எனது மகன் என்ன ஆனார் என்பது பற்றியும் தெரிந்து கண்டுபிடித்து தருமாறும் கேட்டுள்ளோம் என்றனர்.2018ல் நடந்த விசாரணைதமிழக முதல்வர் தனிப்பிரிவிற்கு கடந்த 2018ல் அனுப்பிய மனுவின் அடிப்படையில் ராணுவ அதிகாரிகள் பண்ணைப்புரத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். இதில் 2006ம் வருடம் முதல் காணாமல் போன ராமசாமி எந்தவிதமான தொடர்பிலும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு அதன் அறிக்கையை ராணுவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர். ஆனால், இதுவரை இவரை பற்றிய தகவல்களை எதுவும் ராணுவ தரப்பில் இருந்து வராத நிலையில் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்களது மகன் கதி என்ன என்று புலம்பி வருகின்றனர்.

Related Stories: