திருப்புத்தூர் அருகே குடிநீர் ஊரணியை தூர்வாரும் மக்கள்

திருப்புத்தூர், ஜூன் 21: திருப்புத்தூர் அருகே இரணியூர் சேங்கை ஊரணியை கிராம மக்கள் ஒன்று திரண்டு தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்புத்தூர் ஒன்றியம் அம்மாபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது இரணியூர் கிராமம். இக்கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோயில் எதிரே அம்மன் சேங்கை என்ற குடிநீர் ஊரணி உள்ளது. இவ்வூரணியில் துவைப்பதோ, குளிப்பதோ அங்குள்ள மீன்களைக் கூட பிடிக்கக் கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு. இந்த ஊரணி தண்ணீர் குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இவ்வூரணி மழையில்லாமல் வறண்டு போனது. இதனையடுத்து ஊரணியை செண்பகம்பேட்டை, முத்துவடுகநாதபுரம், நாகலிங்கபட்டி, மார்க்கண்டேயன்பட்டி, காந்திநகர், அயினிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஜே.சி.பி. மற்றும் தளவாட இயந்திரங்கள் கிராம மக்கள் பங்களிப்பிலேயே செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து செண்பகம்பேட்டையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், இந்த அம்மன் சேங்கை ஊரணி சுமார் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரணி முற்றிலும் வறண்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் மிகுந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீருக்கான நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற கிராமங்களில் உள்ள குடிநீர் ஊரணிகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும், என்றார்.

Related Stories: