சீர்காழி அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் மக்கள், வாகனஓட்டிகள் அச்சம் விரைந்து சீரமைக்க கோரிக்கை

சீர்காழி, ஜூன் 21:சீர்காழி அருகே தாழ்வாக தொங்கும் மின்கம்பியால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதனை விரைவில் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி அருகே அகணி, நிம்மேலி மருதங்குடி, ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மின் கம்பங்களும், மின்கம்பிகள் ஆபத்தான நிலையிலும், சாலையில் தாழ்வாக செல்வதால் நடுத்தரமான மற்றும் கனரக வாகனங்கள் சென்றால் உரசும் அபாய நிலை உள்ளது. விவசாய வேலைகளுக்கு வைக்கோல், பஞ்சு ஏற்றி செல்லும் வாகனங்கள் சென்றால் கூட மின் கம்பிகள் உரசி தீப்பற்றும் அபாய நிலை உள்ளது.

இதனால் மருதங்குடி, ஆலஞ்சேரி, அரூர் வழியே பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.  மேலும் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள், செடி கொடிகள் படர்ந்து காணப்படுவதால் அடிக்கடி மின் இனைப்பு துண்டிக்கப்படுகிறது. மேலும், காற்றுவேகமாக வீசும்போது மரக்கிளைகள் மீது மின்கம்பிகள் உரசி மின்கம்பிகள் அறுந்து விழும் அபாய நிலையும் உள்ளது.

மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் காற்றடிக்கும் போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகள் இதனை உடனடியாக ஆய்வு செய்து, அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்குள் தாழ்வாக செல்லும் மின் கம்பி களையும் பழுதடைந்த மின் கம்பங்களையும் சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: