தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை நிலையம் மூடல்

பெரம்பலூர், ஜூன் 21: தமிழக அளவில் தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலியால் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கொண்டிருந்த அம்மா குடிநீர் பாட்டில் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் விற்பனை நிலையம் மூடப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் 4 ஆண்டுகளுக்கு முன் ரூ.10க்கு அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் தமிழக அளவில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்த திட்டம், அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இதன்படி துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மூலம் பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கும் பணி நடந்து வந்தது.

இங்கு வெளியூர்களில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ் பயணிகள், புது பஸ்ஸ்டாண்டுக்கு வந்தவுடன் முதலில் தேடுவது அம்மா குடிநீர் பாட்டில்களை தான். ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில் ரூ.10க்கு விற்கப்படுவதால் பலரும் அதை வாங்கி செல்கின்றனர். பெரம்பலூருக்கு தினம்தோறும் 400 முதல் 500 வரையிலான தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனைக்கு இறக்கப்படும்.

இந்த தண்ணீர் பாட்டில்கள் மதியத்திற்குள் விற்று தீர்ந்துவிடும். மாவட்ட தலைநகராக விளங்கும் பெரம்பலூரில் உள்ள புதுபஸ்ஸ்டாண்டுக்கு தினமும் 1,500 முதல் 2000 குடிநீர் பாட்டில்கள்கூட தேவைப்படும். இந்நிலையில் தமிழக அளவில் நிலவி வரக்கூடிய கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையிலேயே தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடும்போது அங்கிருந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கொண்டு செல்வது சிரமமாக இருந்து வருகிறது.

இதன் காரணமாக பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்டில் கடந்த சில நாட்களாக அம்மா குடிநீர் பாட்டில் வரத்து குறைந்து போனதால் ஒருநாள் விட்டு ஒருநாள் கடை திறக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் பாட்டில் வரத்து முற்றிலும் நின்று போனதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இரும்பு ஷட்டராலான கடை இழுத்து பூட்டப்பட்டு கிட க்கிறது. இதன் காரணமாக புதுபஸ்ஸ்டாண்டுக்கு வந்து செல்லும் வெளியூர் பஸ்களில் வரும் பயணிகளும், பெரம்பலூர் நகர பொதுமக்களும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: