ரூ.6 ஆயிரத்திற்கான விண்ணப்ப மனுக்களை கிடப்பில் வைக்கக்கூடாது

உத்தமபாளையம், ஜூன் 19: உத்தமபாளையம் தாலுகாவில் மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் மானிய தொகையை வாங்கிட வழங்கப்பட்ட விண்ணப்ப மனுக்களை உடனடியாக பரிந்துரை செய்து அனுப்பிட தேனி கலெக்டர் உத்தரவிட்டார். உத்தமபாளையம் தாலுகாவில் கம்பம், கூடலூர், சின்னமனூர் உள்ளிட்ட நகராட்சிகள், உத்தமபாளையம், ஓடைப்பட்டி, மார்க்கயன்கோட்டை உள்ளிட்ட 12 பேருராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் வசிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மத்திய அரசின் பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் என 3 தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த மானியம் கேட்டு விவசாயிகள் பல நூற்றுக்கணக்கில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதற்காக அனைத்து விவசாயிகளுக்கும் தங்கள் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரிகளிடம் பட்டா, சிட்டா, பத்திரம், ஆதார், வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் போட்டோக்களை வழங்கிட உத்தரவிடப்பட்டு இருந்தது. இவை அனைத்தும் வி.ஏ.ஓ.க்களால் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பப்படும். இந்த திட்டத்தை பற்றி ஆய்வு செய்ய தேனி கலெக்டர் மர்யம் பல்லவி பல்தேவ் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கிடப்பில் உள்ள மனுக்களை உடனடியாக பரிந்துரை செய்து அனுப்புமாறு உத்தரவிட்டார். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் இதற்கான பணிகளை துரித கதியில் செய்தனர். உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், கிடப்பில் உள்ள மனுக்கள் எத்தனை என்றும் பரிந்துரைகள் பற்றியும் நேரில் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.

Related Stories: