தாரமங்கலத்தில் பரபரப்பு பெண் வழக்கறிஞரின் தந்தை வீட்டில் துணிகர கொள்ளை

மேச்சேரி, ஜூன்19: சேலம் அடுத்த தாரமங்கலத்தில் வழக்கறிஞரின் தந்தை வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், பீரோவில் வைத்திருந்த 21 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். சேலம் ராமகிருஷ்ணா சாலையை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி ரஞ்சனி(42). இவர்  வழக்கறிஞராக உள்ளார். இவரது பெற்றோர்களான பழனிமலை(78), பாக்கியலட்சுமி(70) ஆகிய இருவரும் தாரமங்கலம் ஆசிரியர் காலனியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பழனிமலைக்கு உடல்நிலை சரியில்லாததால், சேலத்தில் சிகிச்சை எடுப்பதற்காக, கடந்த 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சேலத்தில் உள்ள மகள் ரஞ்சனி வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை பழனிமலையில் வீட்டின் எதிரே வசித்துவரும் கலைச்செல்வி, ரஞ்சனியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பழனிமலையின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஞ்சனி உடனடியாக தாரமங்கலம் சென்று பார்த்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Advertising
Advertising

உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணிகள் சிதறிக்கிடந்தது. மேலும், உள்ளே வைத்திருந்த ₹45 ஆயிரம் ரொக்கம், இருபதே  முக்கால் பவுன் நகைகள் மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து ரஞ்சனி மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர் அமுதா மற்றும் குழுவினர் சம்பவ நடந்த வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: