ஊட்டி, ஜூன் 19: நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல் இயக்கிய 46 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி இயக்கி ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் வாகனங்கள், டாக்சி, லாரிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்டு வந்தன. இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் மாவட்டம் முழுவதும் வரி செலுத்தாமல் இயக்கிய வாகனங்களை பறிமுதல் செய்யும் பணி கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இதில், நீலகிரி மாவட்டத்தில் வரி செலுத்தாமல், பெர்மிட் இன்றி இயக்கப்பட்டு வந்த 46 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிமுறை மீறி இயக்கப்பட்ட ஒரு ஆம்னி பஸ் மற்றும் ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து வரி மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டுள்ளது.