376 ஆதார் சேவை மையங்களுக்கு ‘லாக்’ போராட்டத்திற்கு தயாராகும் ஆபரேட்டர்கள்

திண்டுக்கல், ஜூன் 18: தவறான ஆவணங்களை பதிவு செய்ததாக கூறி தமிழகம் முழுவதும் 376 ஆதார் மையங்களின் ஆப்பரேட்டர் ஐ.டி லாக் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.தமிழகம் முழுவதும் 540க்கும் மேற்பட்ட ஆதார் சேவை மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அல்லது நகராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் என 20க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் செயல்படுகின்றன. உதய் நிறுவனத்தின் கீழ் அரசு கேபிள், எல்காட் உள்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அரசின் மானியம் பெற மற்ற அனைத்து தேவைகளுக்கும் ஆதார் முக்கிய ஆவணமாக கேட்கப்படுவதால் அதிகஅளவில் மக்கள் ஆதார் மையங்களை தேடிவருகின்றனர். இந்த சேவை மையங்களில் மக்கள் புதிதாக ஆதார் கார்டு எடுக்கவும், திருத்தம் செய்யவும் அதிக அளவில் வருகின்றனர்.

புதிய கார்டுக்கு கட்டணம் இல்லை. திருத்தம் செய்வதற்கு ஒருமுறைக்கு ரூ.50 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆதார் எடுக்க போட்டோவுடன் கூடிய அத்தாட்சி தேவை. இதற்கு பான் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாளஅட்டை, டிரைவிங் லைசன்ஸ், ரேசன் கார்டு, பள்ளி கல்லூரி மாணவர்கள் என்றால் அந்த நிறுவனத்தின் ஐ.டி உள்பட 18 ஆவணங்களை இணைக்க வேண்டும். முகவரி அத்தாட்சிக்கு பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம் என 35 ஆவணங்களை இணைக்க வேண்டும். பிறப்பு சான்று அத்தாட்சிக்கு பான்கார்டு, பிறப்பு சான்று, மார்க் சீட் உள்பட 9 ஆவணங்களை இணைக்க வேண்டும். இதில் உரிய ஆவணம் இல்லாவிட்டால் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற ஏ கிரேடு அதிகாரிகளின் லெட்டர் பேடில் எழுதி வாங்கி அவர்களின் அட்டஸ்டேட் வாங்க வேண்டும். இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து ஏற்றினால் தான் ஆதாரில் திருத்தம் அல்லது புதிய கார்டு பெற முடியும். உரிய ஆவணத்தை பதிவு செய்யதாக டாக்குமென்டுகளை நிறுவனம் தள்ளுபடி செய்துவிடும். இதுபோல் அதிகஅளவில் உரிய தள்ளுபடி செய்யப்பட்ட மையங்களின் ஆப்பரேட்டர்களின் ஐ.டி யை ‘டாக்குமென்ட் எரர்’ என கூறி லாக் செய்துள்ளனர். இதனால் மக்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து ஆப்பரேட்டர்கள் சிலர் கூறுகையில், ஆதார் மையங்களில் ரூ.8 ஆயிரம் சம்பளத்துக்கு கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பணியாற்றுகிறோம். மக்கள் கொடுத்த டாக்குமென்ட்களை தான் நாங்கள் பதிவு செய்தோம். திடீர் என டாக்குமென்ட் எரர் என கூறி எங்களின் ஐ.டியை லாக் செய்துள்ளனர். இதனால் 376 மையங்களில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் உரிய விளக்கம் சொல்லவில்லை. எங்களுக்கு இதைதவிர வேறு வேலையும் தெரியாது. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் ஒன்று கூடி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், டில்லியில் லாக் செய்துள்ளனர். அதிக அளவில் தவறான ஆவணங்களை பதிவு செய்து ரிஜெக்ட் ஆனதால் லாக் செய்ததாக தெரிகிறது. உயர்அதிகாரிகள் இதுதொடர்பாக டில்லி அலுவலகத்தில் பேசி வருகின்றனர். லாக் செய்யப்பட்ட ஆப்பரேட்டர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்து பணியில் சேர்க்கலாம் என தெரிவித்துள்ளோம். மையங்கள் மீண்டும் செயல்பட துவங்கும் என்றார்.

Related Stories: