மணப்பாறை அருகே அனுமதியின்றி உற்பத்தி செய்த பிளாஸ்டிக் கம்பெனிக்கு சீல்

மணப்பாறை, ஜூன் 18: மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுப்பட்டியில் இயங்கி வந்த பிளாஸ்டிக் கம்பெனிக்கு அதிகாரிகள் சீல்வைத்தனர். மேலும் அங்கு குவிக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறை நகராட்சி ஆணையர் தேவி தலைமையில் அதிகாரிகள் மணப்பாறை பகுதியின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது பொத்தமேட்டுப்பட்டியில் அனுமதியின்றி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்நிறுவனத்திற்கு சீல் வைத்தனர். இந்த அதிரடி சோதனையில் நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வர் முரளி, மேற்பார்வையாளர்கள் சரவணன், மணிமுத்து, செல்வம், மஹாலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். மேலும் இச்சோதனை தொடர்ந்து நடைபெறும். எனவே பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அனுமதியற்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் வசூலிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: