வேப்பனஹள்ளி அருகே அரசு பள்ளியில் காஸ் சிலிண்டர் அரிசி, பருப்பு திருடிய கும்பல்

வேப்பனஹள்ளி, ஜூன் 18:  வேப்பனஹள்ளி அருகே தொடக்கப்பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே, கொத்தகிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 32 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இப்பள்ளியில் நுழைந்த மர்ம நபர்கள், தலைமை ஆசிரியர் அலுவலக அறையில் இருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த பதிவேடுகளை வெளியில் வீசினர்.

மேலும், சத்துணவு சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, முட்டை மற்றும் காஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடி எடுத்துச்சென்றனர். இதில் சிலிண்டரைத் தவிர மற்ற பொருட்களை பள்ளி எதிரே இருந்த புதரில் வீசி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை, வழக்கம்போல் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில், விரைந்து வந்த வேப்பனஹள்ளி போலீசார், பள்ளியில் புகுந்து சிலிண்டர் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: