தா.பேட்டை, ஜூன் 13: முசிறியில் அரசு நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாசகர்கள், கல்வியாளர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.முசிறியில் அரசு நூலகம் 1955ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 60 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 14 ஆயிரம் உறுப்பினர்கள் வாசகர்களாக உள்ளனர். தினசரி நூலகத்திற்கு சராசரியாக 200 பேர் வந்து தங்களுக்கு தேவையான நூல்கள், நாளிதழ்களை படித்து செல்கின்றனர். 4 நூலகர்களும், பதிவறை உதவியாளர் ஒருவரும், துப்புரவு பணியாளர் ஒருவரும் பணியாற்றுகின்றனர். முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே நூலகம் இயங்கி வந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்தது. மேற்கூரையிலிருந்த காரைகள் பெயர்ந்து விழுந்து கட்டிடம் உறுதித்தன்மையை இழந்து நின்றது. இதையடுத்து ஒன்னறை வருடங்களுக்கு முன்பு முசிறி நல்லமுத்துபிள்ளை தெருவில் ஒரு வாடகை கட்டிடத்திற்கு நூலகம் மாற்றப்பட்டது. தற்போது வரை நூலகம் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகிறது. நூலக கட்டிடத்திற்கு வாடகை, கரண்ட் பில் உட்பட மாதம் ரூ.15 ஆயிரம் வரை செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நூகலத்திற்கு நிரந்தர கட்டிடமும், வாசகர்களுக்கு தேவையான கட்டமைப்புகளும் ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இது குறித்து தினகரனில் அப்போது செய்தி வெளியானது. இதையடுத்து முசிறிக்கு வந்த அப்போதைய திருச்சி கலெக்டர் ராஜாமணி, தா.பேட்டை ரோட்டில் நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் வழியில் அரசுக்கு சொந்தமான இடத்தை நூலக கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்தார். ஆனால், இதுவரை நூலக கட்டிடம் கட்டுவதற்காக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் எந்தவிதமான முயற்சி மேற்கொண்டனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
