ஜமாபந்தியில் 22 மனுக்களுக்கு தீர்வு

ஈரோடு, ஜூன் 13:  ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கடந்த 6ம்தேதி துவங்கியது. இதற்கு உதவி ஆணையர் (கலால்) சேகர் தலைமை தாங்கினார். ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பானுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜமாபந்தியில் தயிர்பாளையம், பேரோடு, நசியனூர், வில்லரசம்பட்டி, கதிரம்பட்டி, தோட்டாணி, புத்தூர் புதுப்பாளையம், வேப்பம்பாளையம், கங்காபுரம், ஆட்டையாம்பாளையம், குமிலம்பரப்பு, அணைநாசுவம்பாளையம், பெரியஅக்ரஹாரம், சூரியம்பாளையம், மேட்டுநாசுவம்பாளையம், கரை எல்லப்பாளையம், எலவமலை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவுநாளில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். கடந்த 4 நாட்களாக நடந்த முகாமில் 6ம் தேதி 31 மனுக்களும், 7ம் தேதி 20 மனுக்களும், 11ம் தேதி 48 மனுக்களும், நேற்று 89 மனுக்களும் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய பரிசீலனை செய்யப்பட்டு 22 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ஜமாபந்தியில் முதியோர் உதவிதொகை, ஒருங்கிணைப்பு சான்று என 12 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில், தாசில்தார் பாலசுப்பிரமணியம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பானுமதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: