நாமக்கல் அருகே இரட்டை கொலையில் திடுக்கிடும் தகவல்கள்

நாமக்கல், ஜூன் 12: நாமக்கல் அருகே இரட்டை கொலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(25). லாரி டிரைவரான இவர், தனது மனைவி கவுரி(21), ஒன்றரை வயது ஆண் குழந்தை புகழ்வின் ஆகியோரை கடந்த 9ம் தேதி தோட்டத்திற்கு அழைத்துச்சென்று இரவு கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், தானும் கழுத்தை அறுத்துக்கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுரேஷ், இருவரையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதாக முதலில் கூறப்பட்டது. தற்போது, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவரால் பேசமுடியவில்லை. இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து தனது கைப்பட ஒரு பக்க அளவில் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு நானும், கவுரியும்  காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எனது மனைவியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஊரில் உள்ளவர்கள் எனது மனைவியை வேறு நபருடன் இணைத்து பேசி வந்தனர். இதனால், எனது மனைவி கவுரி, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். எனக்கு வாழ பிடிக்க வில்லை என பலமுறை கூறி வந்தார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி வீட்டில் தனியாக இருந்த எனது மனைவி கவுரி, விஷம் குடித்துள்ளார். இது தெரியாமல் இரவில் எனது மனைவி குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றேன். அங்கு விஷம் குடித்து விட்டதாக கவுரி என்னிடம் கூறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நான் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, எனது குழந்தையையும் கொலை செய்தேன்.

பின்னர், எனது கழுத்தையும் அறுத்து கொண்டேன். ஊரார் தொடர்ந்து தவறாக பேசியதால், இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டேன் என கடிதத்தில் எழுதியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் கூறுகையில். இந்த வழக்கில் சுரேஷ் தான் குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனைவி குறித்து ஊரில் வசிக்கும் பலரும் தொடர்ந்து தவறாக பேசி வந்துள்ளனர். இதுவும் விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  கொலை செய்யப்படுவதற்கு முன்பு கவுரி விஷம் குடித்திருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. சமுதாயத்தின் தவறான பார்வையால் ஒரு குடும்பமே பலியாகியுள்ளது. இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் வீரக்குமார் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Related Stories: