நுங்கு விற்பனை மும்முரம் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி துவங்கிய முதல்நாளே இலவச பாடப்புத்தகம், உபகரணங்கள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன் 12: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி துவங்கிய முதல் நாளே விலையில்லா பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்துகல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மாணவர்களின் நலனுக்காக தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 215 அரசுப் பள்ளிகளும், 41 அரசு உதவிபெறும் பள்ளிகளும் என மொத்தம் 256 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் 14 வகையான விலையில்லா கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018-19ம் கல்வியாண்டுக்கு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 3,91,083 விலையில்லா பாடப்புத்தகங்களும், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10,18,738 விலையில்லா நோட்டுப் புத்தகங்களும், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 36,927 விலையில்லா பேருந்து பயண அட்டைகளும், 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1,34,676 விலையில்லா சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.

1 மற்றும் 2ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 30,006 விலையில்லா வண்ணக் கிரையான்கள், 3, 4 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 48,319 விலையில்லா வண்ணப் பென்சில்கள், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 1,72,047 விலையில்லா காலணிகள், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 2,01,039 விலையில்லா புத்தகப் பைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 15,520 விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.இதே போன்று நிகழாண்டில் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 3,06,786 எண்ணிக்கையில் விலையில்லா பாடப்புத்தகங்களும், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இதுவரை 1,08,032 நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயரும் என்றார்.

Related Stories: