ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகுஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

திருமலை, ஜூன் 12: ஜெகன்மோகன் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆந்திர மாநிலத்தில் நடந்த தேர்தலில் 151 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 30ம் தேதி மாநில முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார். கடந்த 8ம் தேதி 5 துணை முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

இந்த கூட்டத் தொடரில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வெங்கட அப்பல் நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய சபாநாயகராக தம்மினேனி சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்க உள்ளார். 14ம் தேதி சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையில் கவர்னர் உரையாற்ற உள்ளார். 15 மற்றும் 16ம் தேதி சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17 மற்றும் 18ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அரசின் முடிவு மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. மின்சார ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது என தெலுங்குதேச கட்சி பொலிட்பீரோ கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதற்கான கேள்வியை தெலுங்கு தேசம் கட்சி எழுப்பினால் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: