திருவெறும்பூர் தாலுகா சோழமாதேவி கிராமத்தில் 18 ஆண்டாக வளர்ச்சி பணிகள் இல்லை

திருச்சி, ஜூன் 11: திருவெறும்பூர் தாலுகா சோழமாதேவி கிராமத்தில் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகள் செய்யாமல் முறைகேடு செய்துவரும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் புகார் கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டார். டிஆர்ஓ சாந்தி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

திருச்சி உறையூரில் உள்ள தனியார் (மெத்தடிஸ்) பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி இலக்கியா கடந்த 8ம் தேதி பள்ளி மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் 3 மணி நேரமாக பள்ளி வகுப்பறையிலேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மற்றும் உறபினர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி நிர்வாகம் தங்களை தரக்குறைவாக நடத்துவதாக கூறி இலக்கியாவின் தாய் சங்கீதா மற்றும் உறவினர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

சோழமாதேவி பகுதி மக்கள் அளித்த மனுவில், ‘திருவெறும்பூர் தாலுகா சோழமாதேவி கிராமத்தில் பல ஆண்டாக வசிக்கிறோம். சில ஆண்டுகளாக எங்கள் ஊராட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. 18 ஆண்டாக ஊராட்சி செயலராக பணிபுரிந்துவரும் சூசைராஜ் எங்கள் ஊராட்சிக்கு அரசு வழங்கும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் செயல்படுத்தாமல் முறைகேடு செய்து வருகிறார். அதைப்பற்றி பொதுமக்கள் கேட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி, ஆள் வைத்து மிரட்டுகிறார். இதுதொடர்பாக திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் ஏற்கனவே ஊர்பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சோழமாதேவி ஊராட்சி செயலர் சூசைராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: