காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தல் பூதலூர் ஜமாபந்தி நிறைவு நாள் நேர்காணலில் மணல் குவாரி அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 7: திருக்காட்டுப்பள்ளி அருகே அரசு மணல் குவாரி அமைக்கக்கூடாது என்று பூதலூர் ஜமாபந்தி நிறைவு நாள் நேர்காணலில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்.

பூதலூர் தாலுகாவில் கடந்த 30ம் தேதி முதல் ஜமாபந்தி 4 கட்டமாக நடந்தது. ஒவ்வொரு நாளும் அந்தந்த பிர்காவை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலிடம் அளித்தனர். நிறைவு நாளான நேற்று பூதலூர் சரகத்துக்குட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது. அதைதொடர்ந்து தாலுகா கூட்டரங்கில் விவசாயிகள் நேர்காணல் முகாம் நடந்தது. தாசில்தார் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசுகையில், கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரை கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதால் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மின்மோட்டார் மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காற்று மட்டுமே வருகிறது. குழாய்களையும் பிரித்து மேலும் அதிகப்படியான ஆழத்தில் போர் இறக்கி தண்ணீர் எடுக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சினம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டு பணிகள் நடந்து வருவது வேதனையளிக்கிறது. மழைநீரை நிலத்தடி நீராக அளிப்பது ஆற்று மணல் மட்டுமே. மணல் எடுப்பதன் மூலம் மழை காலங்களில் நிலத்தடி நீர் சேமிப்பே இல்லாமல் போய்விடும். எனவே ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான தாங்கள் குவாரி அமைக்க அனுமதியளிக்க கூடாது என்று தெரிவித்தனர். மேலும் மனு அளித்தனர். மேலும் தாலுகா அலுவலகம் வரும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதை சீர்படுத்த வேண்டும். புதுக்குடி பகுதியில் தனியார் கம்பெனி நிலத்தடி நீரையும், காற்றில் உள்ள ஈரபதத்தை உறிஞ்சி எடுப்பது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது. விவசாயிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக அளிக்கப்படும் சிட்டா, அடங்கல் நகல்கள் போதுமான அளவு வழங்க வேண்டும். பிள்ளை வாய்க்கால் தூர்வாரி புனரமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி நிதியை முறையாக பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் பேசுகையில், நீங்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் வக்கீல் ஜீவக்குமார், கண்ணன், காந்தி, ரவிச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு பல்வேறு தேவைகளுக்காக அளிக்கப்படும் சிட்டா, அடங்கல் நகல்கள் போதுமான அளவு வழங்க வேண்டும். பிள்ளை வாய்க்கால் தூர்வாரி புனரமைக்கும் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.15 கோடி நிதியை முறையாக பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும்.

Related Stories: