துவரங்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு? இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு

மணப்பாறை, ஜூன் 4: துவரங்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கத்தில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகளுக்கு பயிர்கடன், ஆட்டு கடன், மாட்டுக்கடன், வழங்கியதிலும், விவசாயிகளிடமிருந்து பெற்ற வைப்பு தொகையிலும், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு சங்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விவசாயிகள் பெயரில் பல லட்சம் ரூபாய் பண மோசடி நடந்ததாக தெரிய வந்துள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை பார்த்து விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிற 9ம் தேதி வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் கண்ணதாசன் அறிவித்துள்ளார்.

Related Stories: