மோடி படத்தை அவமதித்து பேஸ்புக் பதிவு இளைஞர் காங். நிர்வாகியை கைது செய்ய வேண்டும்

நாகர்கோவில், மே 29 : மோடி படத்தை அவமதித்து பேஸ்புக் பதிவு வெளியிட்ட நபரை கைது செய்ய வேண்டும் என பா.ஜ. நிர்வாகிகள் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் குமரி மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மதியம் எஸ்.பி. நாத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திங்கள்சந்தை பூசாஸ்தான்விளை பகுதியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் மோடியின் புகழுக்கும், பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை மோசமாக சித்தரித்து பதிவு வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பாரதிய ஜனதாவினர் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். எங்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் இந்த பதிவு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் தந்து இருக்கிறது.

 மேற்படி நபரின் இந்த செயல் தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் அமைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட  நபர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறி இருந்தனர். பா.ஜ. மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், மாநகர தலைவர் நாகராஜன், முன்னாள் நகர தலைவர் ராஜன், வக்கீல் அணி நிர்வாகிகள் ரமேஷ், நாகராஜன், மாவட்ட செயலாளர் ஜெகநாதன், இளைஞரணி செயலாளர் சிவபாலன் உள்ளிட்டோர் உடன் வந்திருந்தனர். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் மம்தா படத்தை அவமதிப்பு செய்து பதிவு வெளியிட்ட நபரை உடனடியாக காவல்துறையினர் கைது செய்து, ஜாமீனில் வெளியே விட முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த விவாகரத்திலும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்வாகிகள் கூறினர்.

Related Stories: