திருவண்ணாமலை, கலசபாக்கத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் கலசபாக்கத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவண்ணாமலை, மே 28: திருவண்ணாமலையில் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலசபாக்கத்தில் நடந்த போராட்டத்தால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள மின்நகர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்னையில் சிக்கி தவித்து வருகின்றனர். குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் குடிநீர் தேடி அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த மின்நகர் பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் வேங்கிக்கால் பூமலை வளாகம் அருகே திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ பிரகாஷ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குடிநீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பகுதிகளில் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு ெசன்றுவிட்டது. அப்பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் போதிய நீர் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஊராட்சி சார்பில் சீராக குடிநீர் வழங்கவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கடலாடி இன்ஸ்பெக்டர் மலர், பிடிஓ சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சீரான குடிநீர் வழங்க வேண்டும். சாலையை அகலப்படுத்தும்போது அகற்றப்பட்ட ஆழதுளை கிணறுக்கு பதிலாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து, சீரான குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போளூர்-மேல்சாவங்குப்பம் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் ஏற்பட்டது.

Related Stories: