திருவாசகத்தை சுமந்தபடி சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள் கிரிவலம் தேனியை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையில் மழை வேண்டி

திருவண்ணாமலை, மே 8: மழை வேண்டி திருவண்ணாமலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சிவனடியார்கள் திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். சமீபகாலமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதோடு, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் விரதம் இருந்து குழுவாக கிரிவலம் செல்வதும் சமீபமாக அதிகரித்து வருகிறது. அதன்படி, தேனி மாவட்டம் கோம்பை பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் திருக் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவண்ணாமலையில் நேற்று மேளதாளம் முழங்க திருமுடி எனப்படும் திருவாசகம் தலையில் சுமந்தபடி கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று வழிபட்டனர். திருவாசகத்துடன், நெய் வில்வம் ஆகியவற்றையும் தலையில் திருமுடியாக சுமந்துச் சென்று கிரிவலத்தின் நிறைவாக அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து, 5 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் இதுபோன்ற கிரிவலத்தை மேற்கொண்டு வருவதாக சிவனடியார் திருக் கூட்டம் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

The post திருவாசகத்தை சுமந்தபடி சிவனடியார் திருக்கூட்ட பக்தர்கள் கிரிவலம் தேனியை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலையில் மழை வேண்டி appeared first on Dinakaran.

Related Stories: