முசிறி அருகே தண்டலைபுத்தூரில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த உடற்பயிற்சி மைய பூங்கா

தா.பேட்டை, மே 25:  முசிறி அருகே தண்டலைபுத்தூரில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக ஊராட்சிக்கு சொந்தமான பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.  முசிறி அருகே உள்ள தண்டலைபுத்தூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா கண்ட கண்ட பிறகு சில காலமே பயன்பாட்டிலிருந்த பூங்கா இழுத்துப் பூட்டி வைக்கப்பட்டது. இதனால் பராமரிப்பின்றி பூங்காவின் பொலிவு குறைய தொடங்கியது. மேலும் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஏக்கத்தோடு வெளியிலிருந்து பார்த்து சென்றனர். பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், காலை, மாலை வேளைகளில் முதியோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும், வாலிபர்கள் உடற்பயிற்சி செய்யவும், பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உடனடியாக பயன்படுத்திவிட வேண்டும் என கடந்த 10ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து தண்டலைபுத்தூர் ஊராட்சி ஊழியர்கள் மூலம் பூங்கா சுத்தம் செய்யப்பட்டு, கீழே விழுந்து கிடந்த பூங்காவின் பெயர் பலகை பொருத்தப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தற்போது விடுமுறை என்பதாலும், காலை, மாலை வேளைகளில் குழந்தைகள் பூங்காவில் விளையாடி மகிழ்கின்றனர். முதியோர்கள் காலை, மாலைகளில் நடைபயிற்சியும், ஓய்வு எடுக்கவும் செல்கின்றனர். வாலிபர்கள் தங்களது உடற்பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளனர். பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: