தூத்துக்குடி துப்பாக்கி சூடு நினைவு தினம் அனுசரிப்பு

கடலூர், மே 23: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு கடலூரில் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நினைவு தினம் அனுசரித்தனர். தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஓராண்டு கடந்த நிலையில் அதன் துயர நினைவுகளும் ஆழமாக பதிந்துவிட்டது. அதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக பொதுமக்களும் பல்வேறு அமைப்புகளும் நேற்று ஓராண்டு நினைவு தினத்தை அனுசரித்தனர். கடலூர் எஸ்என். சாவடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நினைவு தினக்கூட்டம் நடத்தினர்.

ஒருங்கிணைப்பாளர் வெண்புறாகுமார் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராயன், ரவி, ஆலோசகர் திருமார்பன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மீனவர் பேரவை மாநில செயலாளர் கஜேந்திரன், இந்திய கம்யூ., நகர செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள் ராயர் ராஜாங்கம், பருதிவாணன், தர்மராஜ், பாபு, கார்த்திகேயன், சாய்ராம், தருமர் உள்பட பலர் இரங்கல் உரையாற்றினர்.

ஆண்டு தோறும் மே 22ம் தேதியை உலக அளவில் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும். இச்சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தூத்துக்குடி சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மவுனம் அனுசரித்து நினைவு அஞ்சலி செலுத்தினர்.

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடக்க இருந்தது. ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி தரவில்லை. இதனால் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ அலுவலகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அன்பழகன் வெங்கடேசன் மற்றும் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட்  கட்சியை சேர்ந்த கோகுலகிறிஸ்டீபன், பகுஜன் சமாஜ் கட்சி  அருட்செல்வன், வழக்கறிஞர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: